சிங்கப்பூரின் சொத்து மேம்பாட்டாளர்கள் அக்டோபர் மாதம் 2,424 தனியார் வீடுகளை விற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் ஆக அதிகமான மாதாந்தர விற்பனை அது.
ஓராண்டுக்கு முன்னர், 2024 அக்டோபரில் 748 தனியார் வீடுகளே விற்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு அதில் 224.1 விழுக்காடு ஏற்றம் பதிவாகி உள்ளது.
அது மட்டுமன்றி, செப்டம்பரில் விற்கப்பட்ட 255 வீடுகளைக் காட்டிலும் 850.6 விழுக்காடு அதிகமான வீடுகளை அக்டோபரில் சொத்து மேம்பாட்டாளர்கள் விற்றுள்ளனர்.
நகர மறுசீரமைப்பு ஆணையம் திங்கட்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட தரவுகளில் இந்த விவரம் இடம்பெற்று உள்ளது.
2024 நவம்பர் மாதம் 2,560 தனியார் வீடுகளை மேம்பாட்டாளர்கள் விற்ற பின்னர் தற்போதுதான் தனியார் வீடமைப்பு விற்பனையில் அதிகமான மாதாந்தர எண்ணிக்கை பதிவாகி உள்ளதாக சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அக்டோபரின் விற்பனை ஏற்றத்திற்கான காரணங்களை ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் விவரித்தார்.
“அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதம் வட்டி விகிதங்களைக் குறைத்ததால் உள்ளூர் வங்கிகளின் அடைமானக் கடன் வட்டி விகிதம் இரண்டு விழுக்காட்டுக்குக் கீழ் இறங்கியது. 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு வட்டி விகிதம் அந்த அளவுக்குக் குறைந்ததால் சொத்துகளில் முதலீடு செய்ய ஏராளமான முதலீட்டாளர்களை அது தூண்டியது,” என்றார் அவர்.

