கோலாலம்பூர்: கடப்பிதழைக் காட்டாமல் ஜோகூர் வழியாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற மலேசியர்கள் 23 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது; மேலும் மூவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உள்ள குடிநுழைவு, சோதனைச்சாவடியிலுள்ள மோட்டார்சைக்கிள் தடம் வழியாக அவர்கள் அப்படி வெளியேற முயன்றனர்.
இதனையடுத்து, அந்த 26 பேரும் கடப்பிதழ் சட்டத்தை மீறிவிட்டதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.
குற்றவாளிகளில் பத்துப் பேருக்கு நவம்பர் 6ஆம் தேதி தலா 1,000 ரிங்கிட் (S$314) அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்களில் மேலும் 13 பேருக்கு பெக்கான் நெனஸ் சிறப்புக் குடிநுழைவு நீதிமன்றம் நவம்பர் 13ஆம் தேதி தலா 1,500 ரிங்கிட் (S$471) அபராதம் விதித்தது.
எஞ்சிய மூவரும் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள். அம்மூவருக்கும் எழுத்துவழி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, நாட்டைவிட்டு வெளியேறுவோர் சட்ட விதிகளுக்கு இணங்கி நடக்கும்படி மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
“விதிமீறுவோர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்துடன், விசாரணைக் காலத்தில் குடிநுழைவுத் துறை அவர்களின் கடப்பிதழைப் பறிமுதல் செய்துவைத்திருக்கும் என்பதால், அவர்கள் தங்களது வேலையையும் இழக்க நேரிடலாம்,” என்று அமைப்பு எச்சரித்துள்ளது.

