நோம் பென்: கம்போடியாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
கம்போங் தோம் மாநிலத்தின் சே சூம்நஸ் கிராமத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது பேருந்து நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தது. இவ்விபத்து வியாழக்கிழமை (நவம்பர் 20) அதிகாலை 4 மணிக்கு நேர்ந்தது.
ஆற்று நீரிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் வெளியே கொண்டுவரப்பட்டனர். இன்னும் 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
“பேருந்து சியெம் ரீப்பிலிருந்து நோம் பென்னுக்குச் சென்றுகொண்டிருந்தது. பேருந்து ஆற்றுக்குள் விழுந்ததில் 13 பேர் மாண்டனர். அவர்கள் அனைவருமே பேருந்துக்குள் இருந்தனர்,” என்று சண்டான் மாவட்டக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
விபத்து குறித்துக் காவல்துறையினர் தகவல்களைத் திரட்டி வருகின்றனர். அவசர மருத்துவ வாகனங்கள், உயிர் பிழைத்தோரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றன.
பேருந்து ஓட்டுநர் தூங்கியதால் வாகனம் பாலத்தின் தடுப்பை மோதி, ஆற்றுக்குள் விழுந்திருக்கக்கூடும் என்று நம்புவதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


