பாரிஸ் தாக்குதல்களின் 10ஆம் ஆண்டு நிறைவு

1 mins read
92e97b01-3872-4de9-a804-2b7588fe840b
பாரிஸ் தாக்குதல்களில் கொல்லப்பட்டோருக்கு மரியாதை செலுத்தும் மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் 10ஆம் ஆண்டு நிறைவு வியாழக்கிழமை (நவம்பர் 13) அனுசரிக்கப்படுகிறது.

ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்காரர்கள் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடத்திய தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர். உணவகங்கள், பட்டக்கிலான் இசை நிகழ்ச்சி அரங்கம் (Bataclan Concert Hall) உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அச்சம்பவத்தில் உயிர் பிழைத்த பலர் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

2015 பாரிஸ் தாக்குதல்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்சில் நடந்த ஆக மோசமான தாக்குதல்களாகும். அச்சம்பவத்துக்குப் பிறகு அந்நாட்டில் பல அவசரகாலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் பல, இப்போது சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்டாட் டி பிரான்ஸ் (Stade De France) விளையாட்டரங்கிற்கு வெளியே அந்தத் தாக்குதல்கள் தொடங்கின. அந்த விளையாட்டரங்கில் நட்புமுறை காற்பந்தாட்டம் நடந்துகொண்டிருந்தது.

அன்றைய பிரெஞ்சு அதிபர் ஃபிராங்குவா ஹோலாந்தும் அன்றைய ஜெர்மானிய வெளியுறவு அமைச்சரும் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நட்புமுறை ஆட்டத்தைக் காண ஸ்டாட டி பிரான்சில் இருந்தனர்.

பாரிஸ் தாக்குதல்களில் உயிர் பிழைத்தோர், கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஆகியோருடன் சேர்ந்து பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 11.30 முதல் மரியாதை செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்