சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து நிறைவுசெய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும்வேளையில், வங்கக்கடலில் ‘மோன்தா’ புயல் உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை முதல்வர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, அந்த முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து, 12 பொக்லைன் இயந்திரங்கள், 4 ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்திப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்பே முதல்வர் வழிகாட்டுதலின்படி 2025 செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை நீர்வளத்துறை மேற்கொள்கிறது. முகத்துவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளினால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இந்நிலையில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமானதால் முதல்வர் அக்டோபர் 24ஆம் தேதி, அடையாறு முகத்துவாரப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மண் திட்டுக்களை அகற்றி, அடையாறு வெள்ளநீர் விரைவாக வடிய வகைசெய்யும்படி ஆணையிட்டார்,” என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

