சென்னை: தமிழகத்தில் ‘ஏஐ’ தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பது தொடர்பான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது. ஆறு மாதங்களுக்குள் பணிகளை முடித்து ஆய்வகத்தைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் வேகப்படுத்தி வருகிறது.
செயற்கைத் தொழில்நுட்பம் (ஏஐ) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழக அரசும் ‘ஏஐ’ தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
தரவுத் தொகுப்புகளை வைத்து முன்கணிப்புகளை மேற்கொள்ள பெரிதும் உதவும் இந்தத் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் உள்ள இளையர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் ‘கூகல்’ நிறுவனத்துடன் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அதிகாரிகள் குழு ‘கூகல்’ நிறுவனத்துடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் தமிழகத்தில் ‘ஏஐ’ ஆய்வகம் அமைப்பது தொடர்பாக, அரசின் வழிகாட்டி, ‘கூகல்’ நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால், ஓராண்டு ஆனபிறகும் ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, பணிகளை விரைவுபடுத்த ‘கூகல்’ நிறுவனத்துடன் தமிழக அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் ஆய்வகப் பணிகளைத் துவக்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏஐ ஆய்வகம் அமைப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை கூகல் வழங்கும் என்றும் அதற்கேற்ப ஆய்வகப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆய்வகத்தின் சேவைகளை ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள், இளையர்கள் பயன்படுத்தலாம் என்றும் சென்னை தரமணிக்கு அருகில் ஆய்வகம் அமைக்க இடம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.