திருப்பூர்: டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கூடாது என்று வலியுறுத்தி, திருப்பூரில் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால்தான் தங்கள் கணவன்மார்கள் பாதுகாப்பாக வீடு திரும்புகின்றனர் என்றும் தங்கள் பகுதியில் எந்தவிதமான குற்றங்களும் நடப்பதில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் பகுதி முக்கியச் சாலையில், 1909 என்ற இலக்கம் கொண்ட டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது.
இந்தக் கடையால் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார் எழுப்பிய ஒருதரப்பினர், அக்கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், மதுக்கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“கடந்த 35 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மதுக்கடை இயங்கி வருகிறது. எங்கள் வீட்டு ஆண்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு வந்துசேர மதுக்கடைதான் காரணம். மேலும், இந்தப் பகுதியில் இதுவரை சிறு திருட்டுச் சம்பவம்கூட நிகழ்ந்ததில்லை.
“தற்போது டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் இளையர்கள், இந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகிறார்கள். எனவே, மதுக்கடையை மூடக்கூடாது,” என அப்பகுதி பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தக் கோரிக்கையுடன் திங்கள்கிழமையன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு அப்பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.