காஞ்சிபுரம்: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு ஏறக்குறைய 55 நாள்களுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை விஜய் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) மீண்டும் தொடங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை நீலாங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய், காலை 11 மணியளவில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு ‘கியூஆர்’ கோடு வசதியுடன் கூடிய பிரத்யேக நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.
கல்லூரியின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சிப்பவர்களைத் தடுப்பதற்காகத் தகரத்தால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது.
ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு யாரும் நெருங்காத வகையில், தவெகவின் பயிற்சி பெற்ற தொண்டர் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கியப் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு
கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சி இது என்பதால், தற்போதைய அரசியல் சூழல் குறித்து விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் காணப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இன்றைய கூட்டத்தில் அவர் நெசவாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியப் பிரச்சினைகளான பரந்தூர் விமான நிலைய விவகாரம், சிப்காட் தொழிற்சாலை விரிவாக்கம், நெசவாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

