சென்னை: தவெக தலைவர் விஜய் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை வரும் 13ஆம்தேதி திருச்சியில் இருந்து தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் தமது அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது தேர்தல் பிரசாரத்தை 13ஆம் தேதி திருச்சியில் அவர் தொடங்குவார் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். திமுக ஆளுங்கட்சி என்பதால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களே மறை[Ϟ]முக பிரசாரக் கூட்டங்களாக அமைந்துவிடுகின்றன.
எனவே, விஜய்யும் தனது பிரசாரத்தை இயன்ற விரைவில் தொடங்க வேண்டும், அரசியல் கட்சித் தலைவராகவும் அவர் மக்களுடன் நெருக்கமாக வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
இதற்கேற்ப, நாள்தோறும் இரண்டு மாவட்டங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அவரது இந்த முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தவெக மாவட்டச் செயலர்களுக்கு, பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.
விஜய்யின் தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்கும் என தவெக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

