தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாண்டோரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டம்

2 mins read
3d8ae945-7189-4f4b-9844-0979332e99e9
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டோரின் குடும்பத்தினர், அங்குள்ள அரசு மருத்துவமனை முன்பாகத் திரண்டு துக்கம் தாளாது கண்ணீர்விட்டனர். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்ட 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூற நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்சந்திப்பு வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 27) இடம்பெறலாம் எனச் சொல்லப்படுகிறது.

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் கிட்டத்தட்ட ஐந்து, ஆறு மணி நேரம் செலவிட்டு, அவர்களின் கவலைகளை விஜய் செவிமடுப்பார் என்று ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் விஜய் காணொளி வெளியிட்டு, மாண்டோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். சில நாள்களுக்குப்பின், பாதிக்கப்பட்டோரிடம் காணொளி வழியாகப் பேசிய விஜய், நேரில் வந்து அவர்களைப் பார்ப்பதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த விஜய், சட்டரீதியான அனுமதிக்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம் என்றும் அனுமதி கிடைத்ததும் உறுதியாகச் சந்திப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

அவ்வகையில், கரூரில் உள்ள மண்டபத்தில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க விஜய் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், மண்டபம் கிடைப்பதில் சிக்கல் நீடித்ததாக தவெக தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்திற்கு வரவழைத்து, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரைச் சந்திக்க விஜய் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கரூர் துயரம் நிகழ்ந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அதாவது அக்டோபர் 27ஆம் தேதி இந்தச் சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.

முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

கரூர் துயரம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்