தென்காசி: தமிழகத்தின் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த ஐவர் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள அவர்களின் குடும்பத்தார், எப்படியாவது அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மேலும், அங்கு அல் காய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கமும் நீடிக்கிறது.
இந்நிலையில், அங்குள்ள கோவ்ரி நகரில் வேலைசெய்துவந்த இந்திய ஊழியர்களில் ஐவரை ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்திச் சென்றனர்.
அவர்கள் கடத்தப்பட்டதை மாலியிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியது.
“நவம்பர் 6ஆம் தேதியன்று இந்தியர்கள் ஐவர் கடத்தப்பட்டது குறித்து அறிந்துள்ளோம். கூடிய விரைவில் அவர்களைப் பாதுகாப்பாக விடுவிப்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுடனும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனும் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்று எக்ஸ் பதிவு வழியாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அவர்களை விரைந்து விடுவிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சும் தெரிவித்திருக்கிறது.
மாலியிலுள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது என்றும் அதே வேளையில் இந்திய வெளியுறவு அமைச்சு, வெளிநாட்டு அமைப்புகளுடனும் அனைத்துலகப் பங்காளிகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
தொடர்புடைய செய்திகள்
கடத்தப்பட்டவர்கள் குறித்த விவரங்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது. புதியவன் (கொடியங்குளம்), பொன்னுத்துரை (நாரைக்கிணறு), பேச்சிமுத்து (வேப்பங்குளம்), இசக்கிராஜா (முத்துகிருஷ்ணபுரம்), தளபதி சுரேஷ் (புதுக்குடி) ஆகியோரே அந்த ஐவர்.
அவர்கள் ஐவரும் மும்பையைச் சேர்ந்த ‘டிரோயிங் ரயில் லைட்டிங்’ எனும் நிறுவனத்தின் சார்பில், கோவ்ரி நகருக்கு அருகே மின்னிணைப்புத் திட்டம் தொடர்பில் பணியாற்றி வந்ததபோது பயங்கரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதால் தாங்கள் அச்சத்துடன் இருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறினர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாசும் இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவ்ரி நகரிலுள்ள மற்ற இந்தியர்கள் அனைவரும் மாலித் தலைநகர் பமாக்கோவுக்கு இடம் மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

