இருமொழிக் கொள்கையே தமிழகத்தின் உறுதியான கொள்கை: ஸ்டாலின்

2 mins read
faac681a-3609-4758-9a08-ca9c623a8dcb
தமிழகத்துக்கான மாநிலக் கல்விக் கொள்கையில், தாய்மொழி தமிழ் பிரதானமான அடையாளமாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகக் கல்விக் கொள்கையில் தமிழ் பிரதானமான அடையாளமாக இருக்கும் இருமொழிக் கொள்கையே தமிழகத்தின் உறுதியான கொள்கையாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியிட்டுப் பேசிய அவர், கல்வியில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம் என்றார்.

மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்து வரும் தமிழக அரசு, அதற்கு மாற்றாக மாநிலத்துக்கு எனத் தனிப்பட்ட கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை தனித்துவமானது; முற்போக்குச் சிந்தனை கொண்டது. எதிர்காலத் தேவைக்கான ஆற்றலைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது.

தமிழும் ஆங்கிலமும்தான் உறுதியான கொள்கை. இருமொழிக் கொள்கைதான் நமது உரிமையான கொள்கையாக இருக்கும். இந்தக் கல்விக் கொள்கையில் தாய்மொழியான தமிழ், பிரதானமான அடையாளமாக இருக்கும் என்றார் திரு ஸ்டாலின்.

படித்து, மனப்பாடம் செய்து கேள்வி கேட்கும் மாணவர்களைவிட, சிந்தித்துக் கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்கும். படித்த மாணவர்களாக மட்டுமல்லாமல், படைப்பாளர்களாகவும் அவர்களை உருவாக்கும். அறிவியலுக்குப் புறம்பான சிந்தனைகள் இதில் இல்லை. எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலை வழங்கும்.

இந்தக் கல்விக் கொள்கைமூலம் கல்வியில் உலகளாவிய போட்டிகளை நமது மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளலாம். தமிழகத்தில் நவீன பசுமைப் பள்ளிகள், வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றார் அவர்.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 75 விழுக்காட்டினர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தின் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு சார்பில் புதிய மாதிரி வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும். கல்வித் தொலைக்காட்சியும் மணற்கேணி செயலியும் ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை என்ற நிலையை உருவாக்கும்.

“நான் முதல்வன் திட்டம் வேலைக்கு வழிகாட்டியாக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். இவ்வாறு கல்வித்துறையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறோம். கல்வி எல்லோருக்குமானது, அங்கு பாகுபாடு இருக்காது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் பல்கலை. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியாா் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர். கிட்டத்தட்ட 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரித்து, 2024 ஜூலை மாதம் தமிழக அரசிடம் சமா்ப்பித்தனர்.

குறிப்புச் சொற்கள்