சென்னை: பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினகரனின் முடிவை அடுத்து, அவர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் நடப்பு திமுக ஆட்சியை அகற்ற பலமான கூட்டணி அமைக்க பாஜக விரும்புகிறது. இதன் அடிப்படையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதாக அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும் சில கட்சிகளும் இக்கூட்டணியில் இணையும் என அவர் கூறியிருந்தார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று, தனிக்கட்சி நடத்தி வரும் டிடிவி தினகரன் (அமமுக), ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
மூவரும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படாவிட்டால், பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலிருந்து இந்த மூவருக்கும் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூவருடன் இணைந்து செயல்பட இயலாது என்ற முடிவில் உறுதியாக உள்ளார். குறிப்பாக, ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
எனவே குறைந்தபட்சம், தினகரன் தலைமையிலான அமமுகவை கூட்டணியில இணைக்க அவர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் எனக் கருதப்பட்டது. ஆனால், நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் பழனிசாமி, மனம் மாறுவதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், காட்டுமன்னார் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 2026 தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் கூட்டணி அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. இப்போது தினகரன் தரப்பும் விலகியிருப்பதும், அமமுகவுக்கு தவெக திடீர் அழைப்பு விடுத்திருப்பதும் பாஜக தலைமைக்குப் பேரதிர்ச்சி அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக பிரித்த வாக்குகள் காரணமாக, அதிமுக தான் போட்டியிட்ட 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது எனச் சுட்டிக்காட்டியுள்ள அரசியல் ஆய்வாளர்கள், பாஜக கூட்டணியிலிருந்து அமமுக விலகியது திமுகவுக்குச் சாதகமாக மாறும் எனக் கூறப்படுகிறது.

