மின்மாற்றி கொள்முதல் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்து

2 mins read
218cc053-8695-4fd7-b179-1e4d1bcefc05
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றிக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்காக அதிக விலைகொடுத்து 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி தமிழக லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் அளித்து 30 மாதங்கள் ஆகியும் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இந்த முறைகேடுகளில் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர், அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

இரண்டாவது குற்றவாளி, மின்வாரியத்தின் முன்னாள் தலைவர் ராஜேஷ் லகானி. இவர் பாதுகாப்பான முறையில் மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது குற்றவாளி, மின் வாரிய நிதி கட்டுப்பாட்டாளர் வி. காசி. இவரது வீட்டில் அண்மையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், திமுக அரசு இவருக்கு மின்வாரியத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளராகப் பதவி உயர்வு அளித்துக் கௌரவித்துள்ளது.

மின்மாற்றி கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்குத் தொடுப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் திமுக ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த சிபிஐ (CBI) விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்