புதுடெல்லி: இந்திய அரசு மாநில வாரியாக தனிநபர் வருமானம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
பீகாரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் மக்களவையில் நாட்டின் தனிநபர் வருமான விவரங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
“இந்தியப் புள்ளிவிவரங்கள், திட்ட அமலாக்க அமைச்சின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2024-2025ஆம் ஆண்டுக்கான தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.114,710 ஆக உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, இது ரூ.72,805 ஆக இருந்தது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் தனிநபர் வருமானம் மாறுபடும். பொருளியல் வளர்ச்சி, துறைசார் அமைப்பு, கட்டமைப்பு ஏற்றதாழ்வுகள், நிர்வாக வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள் போன்ற காரணிகளால் அவை வேறுபடுகின்றன,” என அவர் தமது பதிலில் கூறினார்.
மேலும், மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களின்படி, இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாகக் கர்நாடகம் திகழ்கிறது.
அங்கு கடந்த நிதியாண்டுத் தனிநபர் வருமானம் ரூ.204,605ஆக இருந்தது.
அப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. அம்மாநிலத்தின் தனிநபர் வருமானம் 2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.196,309ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு அடுத்த இடங்களில் அரியானா (ரூ.1,94,285), தெலுங்கானா (ரூ.1,87,912), மராட்டியம் (ரூ.1,76,678), இமாச்சல பிரதேசம் (ரூ.1,63,465) ஆகிய மாநிலங்கள் உள்ளன,” என மத்திய இணை அமைச்சர் தமது எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்திருந்தார்.

