குழந்தைகளுக்கு இன்சுலின் வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது: மா.சுப்பிரமணியன்

2 mins read
aaa70830-b5a0-4df4-9721-b2accfe11e66
அமைச்சர் மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவைவிட இந்த எண்ணிக்கை அதிகம் என்றாலும், உயிரிழப்புச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நீரிழிவு தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், தமிழகத்தில் ‘டைப் - 1 டயாபடிக்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்க்கு பரவலாக உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இத்திட்டத்தின்கீழ் 5,064 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என்றும் கூறினார்.

இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தாலும், குழந்தைகளுக்கான இன்சுலின் வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டுமே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“தேசிய அளவில் நீரிழிவு நோயாளிகள் 12 விழுக்காடு உள்ளனர். தமிழகத்தில் இது 13%ஆக உள்ளது. பாதிப்பு அதிகம் இருந்தாலும், உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளன.

“தற்போது தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், ஆண்டுக்கு 17,000 என்ற அளவில் உள்ளன. இவற்றை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“சென்னை, தஞ்சாவூர், கோவை உட்பட ஏழு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான ‘டைப் - 1, டைப் - 2’ பிரத்யேக சிகிச்சை மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இது, திருவாரூர், நாகைக்கும் விரிவுபடுத்தப்படும்,” என்றார் திரு மா. சுப்பிரமணியன்.

‘பாதம் காப்போம்’ திட்டம் துவக்கப்பட்ட பின், 45 ஆயிரம் பேருக்கு பாத பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் 33 ஆயிரம் பேருக்கு, பாதப் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், 26 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சையும் 3,169 பேருக்கு உறுப்பு நீக்க சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்