சென்னை: மருத்துவப் படிப்புக்கான ‘நீட் தேர்வு’ எழுதும் மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
சென்னையில் திங்கட்கிழமை (ஜூன் 16) இத்திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் பாடத்திற்கு இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“மனநல ஆலோசனைகள் வழங்குவதோடு மாணவர்களுக்கு எதிர்கால கல்விக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது, எதைப் படித்தால் வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தான விளக்கங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில், 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவர்கள் 59,534 பேர்.
முதற்கட்டமாக இந்த மாணவர்களுக்கு 80 மனநல ஆலோசகர்களைக் கொண்டு இரு வெவ்வேறு நேரங்களில் மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
“ஜூன் 16, திங்கட்கிழமை ஏறக்குறைய 600 மாணவ, மாணவியரைத் தொடர்புகொண்டதில், 30% மாணவர்களுடன் பேச இணைப்பு கிடைக்கவில்லை. மீதமுள்ள 70% மாணவர்களுடன் பேச தொடர்பு கிடைத்தது.
“நீட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியிருந்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் உள்ளன. எனவே, மீண்டும் இதே தேர்வை எழுதும் வாய்ப்பு இருப்பதால், மனம் தளராமல் படிப்பை தொடர வேண்டும் என்று மாணவர்களிடத்தில் அறிவுறுத்தப்படுகிறது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பிள்ளைகளிடம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது, அதிகமாக கோபப்படவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என்று பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 11,850 பேருக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் மருத்துவத்துறை சார்ந்த மேலும் பல்வேறு படிப்புகளில் சேர 20 ஆயிரம் பேருக்கு வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“பதற்றத்தோடு உள்ள மாணவர்களை நிதானப்படுத்துவதோடு, அவர்களுக்கான மன அமைதியை ஏற்படுத்துகின்ற வகையில் இந்தத் திட்டம் பயன்படும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.