சென்னை: செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
அதன் முடிவில் இது தொடர்பாகத் தாக்கல் செய்த மனுவை செந்தில் பாலாஜி தரப்பு திரும்பப் பெற்றது.
கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பண மோசடி செய்ததாக 2023ஆம் ஆண்டு கைதானார். இதனால் அவர் தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.
ஓராண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிணையில் வெளிவந்த அவர் அடுத்த நாளே மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கலாயின.
அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமிக்கக் கூடாது என்று உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் பிணையை நீட்டித்தது. இதனால் அவர் மீண்டும் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சராக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் அமைச்சராகத் தொடரக்கூடாது என அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு சுட்டிக்காட்டியது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “செந்தில் பாலாஜி அமைச்சராவது குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர் அமைச்சரான பின்பு சாட்சியங்களை அழிக்க நினைத்தாலோ அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ உடனடியாக பிணை ரத்து செய்யப்படும். இதைத்தான் இதற்கு முன்பும் இதேபோன்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்,” எனத் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“அமைச்சர் ஆன பின்னர் சாட்சிகளை மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டால் மனுதாரரின் (செந்தில் பாலாஜி) பிணை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்.
“அதாவது, பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம்,” என்றும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தது.