வலுத்தது புயல்: சென்னை, ஆந்திராவில் விமான, ரயில் சேவைகள் பாதிப்பு

2 mins read
e9a9bee5-fc41-42be-b56e-ec2d98b79b73
மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: மோன்தா புயல் காரணமாக சென்னைக்கும் ஆந்திராவுக்கும் இடையேயான விமானச்சேவை பாதிக்கப்பட்டது. திங்கட்கிழமை (அக்டோபர் 27) ஒரே நாளில் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மோன்தா புயல் செவ்வாய்க்கிழமை காலை தீவிர புயலாக மாறியது. அது ஆந்திரா கடற்பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதாக வானிலை மையம் அறிவித்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தாலும் இயல்பு வாழ்க்கை முடங்கவில்லை.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் மூன்று விமானங்களும் ரத்தாகின.

மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையில் மோன்தா புயல் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) இரவு கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

புயலின் சீற்றத்தால் ரயில் சேவை பாதிப்புக்குள்ளானது. ஆந்திரக் கடலோரப் பகுதி வழி செல்லும் பல ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி காலை வரையிலான நிலவரப்படி, சென்னையில் 267 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

மேலும், 111 மையங்களில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் இதுவரை ஐந்து லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்க 103 படகுகள் தயார்நிலையில் உள்ளன. தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 90 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுவர். மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,490 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

“மரக்கிளை அகற்றும் 15 வாகனங்கள் உட்பட மொத்தம் 478 வாகனங்கள், 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.

“சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது,” என்று மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்