ராமேசுவரம்: இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின் பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. இந்தியாவுக்கு மிக அருகில், ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து 40 கடல்மைல் தொலைவில் அது உள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக, அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பருத்தித்துறை துறைமுகம் சேதமடைந்தது. 1995 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இந்தத் துறைமுகத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
முன்னதாக, இலங்கையின் வடமாநிலப் பகுதியில் கடல் அட்டை பண்ணை வளர்ப்பில் கவனம் செலுத்தி வரும் சீனா, இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள இந்தத் துறைமுகத்தை மேம்படுத்தத் தீவிரம் காட்டியது.
ஆனால், இலங்கை அமைச்சரவை பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள இந்திய அரசுக்கே ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் கடலோரப் பொறியியல் நிறுவனத்தினர் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்திய துணைத் தூதர் சாய் முரளியும் இதில் பங்கேற்றார்.


