வேலூரில் தொழில்நுட்பப் பூங்கா திறப்பு

2 mins read
4794d0b2-f093-4a42-bc72-0112f97d6d43
வேலூரில் சிறியளவிலான தகவல் தொழில்நுட்பப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொளி மூலம் திறந்து வைத்தார். - படம்: ஊடகம்

சென்னை: வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே ரூ.32 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொளி மூலம் திறந்து வைத்தார்.

இந்தச் சிறிய தொழில்நுட்பப் பூங்கா மூலம் சுமார் 600 பேர் நேரடியாகவும், 50 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து அங்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றி உரையாற்றினார்.

அப்போது பேசிய ஆட்சியர் சுப்புலட்சுமி, “வேலூர் மாவட்ட பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கத்தில் இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்ட உள்கட்டமைப்பு மேம்படுவதுடன் நகருக்கும் கிராமங்களுக்கும் உள்ள பொருளாதார இடைவெளியைக் குறைக்க இது ஓர் இணைப்பாக அமையும்,” என்று கூறினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 500,000 சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6,000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

தகவல் தொழில்நுட்பச் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்