சென்னை: தமிழ் நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு தமிழ் நாட்டின் ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார். அதையடுத்து அந்த சட்ட முன்வரைவு சட்டமன்றத்தில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான ஆய்வுகள் நிறைவடைந்து, வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் தொடர்பான சட்ட முன்வரைவைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இடம் தேர்வு செய்து தயார் நிலையில் உள்ளது.
சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வரைவு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு தொடர்புடையவர்களிடம் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி கூறியுள்ளார்.