தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பர் 2: திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆர்ப்பாட்டம்

2 mins read
5d4bc720-9183-4c7f-ac93-c579a024aceb
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அமெரிக்க வரிவிதிப்பால் திருப்பூர் தொழில்துறையினர் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தொழில்துறையினரை நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டும் எனத் தமிழக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய அரசு திருப்பூரைப் புறக்கணித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்தப் புறக்கணிப்பைக் கண்டித்தும் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செப்டம்பர் 2 அன்று திருப்பூர் ரயிலடி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், “பண மதிப்பிழப்பு, முறையற்ற ஜிஎஸ்டி, கொரோனா பேரிடர் என்ற அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களால் நசிந்துபோயிருந்த திருப்பூர் பின்னலாடைத் தொழிலானது, தற்போது புத்துயிர் பெற்று மீண்டும் பழைய நிலையை எட்டிப்பிடித்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறத் தொடங்கியது.

“ஆனால், அதன் மீது விழுந்த பேரிடியாக அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு வந்து விழுந்தது. ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட மோசமான தோல்வியையே இந்த விளைவுகள் காட்டுகின்றன,” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படப்போகும் பாதிப்புகளை முன்கூட்டியே தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியும், மத்திய அரசு எந்த நிவாரண நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டின் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்