மதுரை: அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் சாலை ஓரங்களிலும் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோருபவர்களிடம் இருந்து, ஒரு கொடிக்கம்பத்துக்கு 1,000 ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை நீதிமன்றக் கிளை ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்த நடைமுறையைப் பின்பற்றாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மதுரையின் பல்வேறு இடங்களில் அதிமுக கொடிக்கம்பங்களை அமைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கட்சிகள், சாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, கொடிக்கம்பங்கள் தொடர்பாக முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவால் வழிகாட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமை (அக்டோபர் 15) நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு சாலையோரங்களிலும் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவர்களிலும் கொடிகம்பங்கள் அனுமதியின்றி அமைக்கப்படுவது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
“சாலையோரங்களில் கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கேட்பவர்களிடம் ஒரு கொடிக்கு 1,000 ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டும். இது அரசுக்கு வருவாயை ஈட்டி கொடுக்கும்.
“மேலும், கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து துறைத் தலைவர்களுக்கும் தலைமை செயலர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்,” என்று நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.