எஸ்.ஐ.ஆர் பணிகளைப் புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு

1 mins read
4e4813e5-20a9-451d-b801-c85aba421872
முறையான பயிற்சிகள் இன்றி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் சுமை அதிகமாக உள்ளதாக வருவாய்த் துறை ஊழியர்கள் புகார் அளித்துள்ளதாக வருவாய்த்துறை சங்கம் செவ்வாய்க்கிழமை முதல் எஸ்ஐஆர் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி ‘எஸ்.ஐ.ஆர்.’ என்னும் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் புறக்கணிக்கப்படும் என்று வருவாய்த்துறை சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வருவாய்த் துறை கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திட்டமின்றி முறையான பயிற்சியின்றி நிதி வழங்காமல் அவசரகதியில் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என அது தெரிவித்துள்ளது.

இது அணைத்து நிலை வருவாய் ஊழியர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களுக்கு பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலையவர் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுவார்கள் என்றும் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் ‘எஸ்ஐஆர்’ என்னும் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளைத் தொடங்கி நடத்திக் கொண்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்