சென்னை: ரேசன் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்க ஏதுவாக, முதல்வரின் ‘தாயுமானவர்’ திட்டம் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘வீடு தேடி வரும் மருத்துவம்’ எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்த வரிசையில், தற்போது ‘தாயுமானவர்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரால் இப்பொருள்களை நேரில் சென்று வாங்க முடியவில்லை.
இதைக் கவனத்தில் கொண்டு அனைத்துப் பொருள்களையும் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க ‘தாயுமானவர்’ திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
இத்திட்டத்தின்படி, ஏறக்குறைய 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் 70 வயதிற்கும் மேற்பட்ட 20 லட்சம் முதியோர், 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர். மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்துக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இத்திட்டமானது நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தைச் சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

