மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அரிய வகை பறவைகள் பறிமுதல்; மூன்று பேர் சிக்கினர்

2 mins read
e53a157e-ab56-4770-9ebd-e36a1d4a93ee
மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட ‘பாலி’ மைனாக்கள்.  - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அரிய வகை ‘பாலி’ மைனாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை மலேசியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

மருத்துவப் பரிசோதனைகள் இல்லாமல், சென்னைக்கு கொண்டு வரப்பட்டதால், அந்த மைனாக்கள் மூலம், வெளிநாட்டு நோய்க் கிருமிகள் இந்தியாவில் பரவிவிடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடத்தி வரப்பட்ட பத்து அரிய வகை மைனாக்களும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் இருந்து தங்கம், விலை உயர்ந்த மற்ற பொருள்களைப் போல் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகளும் கடத்தி வரப்படுகின்றன. அந்த வகையில், சனிக்கிழமை (நவம்பர் 1) காலை கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானத்தில் வந்த பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ரஹ்மத் (34 வயது) உட்பட மூன்று பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மூவரும் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று விமானத்தில் திருப்பி வந்திருந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மூவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிக்க, அவர்களுடைய உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது ஒரு பெரிய பெட்டியில் இருந்து நெகிழிக் கூடைகளுக்குள் மலேசியாவின் அபூர்வ வகை பறவை எனக் கருதப்படும் ‘பாலி மைனா’ என்ற வெள்ளை நிறப் பறவைகள் இருப்பது தெரியவந்தது.

மொத்தம் 10 மைனாக்கள் இருந்தன. அரை மயக்க நிலையில் இருந்த அந்தப் பறவைகளை அதிகாரிகள் உடனடியாக மீட்டு, மயக்கத்தைப் போக்கி காப்பாற்றினார்கள்.

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அவற்றைக் கொண்டு வந்ததாகவும் இந்தப் பறவைகளை சிலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவார்கள் என்றும் கைதான மூவரும் தெரிவித்தனர்.

ஆனால் இந்தப் பறவைகளை மலேசிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, முறையான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அத்துடன் பறவைகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களும் இல்லை எனத் தெரியவந்தது.

மூவருக்கும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்