பாமகவிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ்

2 mins read
0397668c-6ad1-48d5-b144-e05c27b05ebf
தனிமனிதனாகத் தான் ஆரம்பித்த பாமகவைச் சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை என ராமதாஸ் கூறினார். - கோப்புப் படம்: ஊடகம்

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் அரசியலில் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 11) அறிவித்துள்ளார்.

மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது, மீறினால் அவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

அண்மை காலமாக ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

ராமதாசின் எதிர்ப்பை மீறி, கட்சி நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதுகுறித்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அவர் விளக்கமளிக்க வேண்டும் என அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால், அக்குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்காததால் கூடுதலாக 10 நாள்கள் அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க அன்புமணிக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அன்புமணிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கமளிக்காத காரணத்தால் அவை உண்மையானவையே என முடிவு செய்யப்படுகிறது,” எனக் கூறினார்.

மேலும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவருடைய நடவடிக்கையும் போக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தலைமை கருதுவதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்குவது என்று முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“பாமகவைச் சேர்ந்தவர்கள் அவருடன் எந்தத் தொடர்பும் கட்சி சார்பாக வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அப்படி மீறி வைத்துக் கொண்டால் அவர்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்.

“அன்புமணி வேண்டுமென்றால் தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால், அந்தக் கட்சி வளராது. தனிமனிதனாக நான் ஆரம்பித்த பாமகவைச் சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. வேண்டுமென்றால் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார் ராமதாஸ்.

இதற்கிடையே, என்னைக் கட்சியிலிருந்து நீக்க ராமதாசுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்