ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் நடந்த இரட்டைக் கொலை, கொள்ளை வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளி நாகராஜ் தப்பியோட முயன்றபோது, காவலர்கள் அவரைச் சுட்டுப் பிடித்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு கோயிலின் காவலாளிகள் இருவர் (பேச்சிமுத்து, சங்கர பாண்டியன்) கொலை செய்யப்பட்டனர். உண்டியல் காணிக்கை, குத்துவிளக்குகள், சிசிடிவி பதிவுகள் இருந்த டிவிஆர் ஆகியவை கோயிலில் இருந்து திருடப்பட்டிருந்தன.
அதைத்தொடர்ந்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையின் முடிவில், வடக்கு தேவதானத்தைச் சேர்ந்த நாகராஜ் (25) என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருடப்பட்ட பொருள்கள், ஆயுதங்களை எடுப்பதற்காக நாகராஜை காவலர்கள் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளர் கோட்டியப்பசாமியை வெட்டிவிட்டுத் தப்ப முயன்றார்.
உடன் இருந்த காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், தப்ப முயன்ற நாகராஜின் காலில் சுட்டுப் பிடித்தார்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த உதவி ஆய்வாளர் கோட்டியப்பசாமி, காலில் சுடப்பட்ட நாகராஜ் இருவரும் தற்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை நடந்தபோது, நாகராஜ் பொதுமக்களோடு சேர்ந்து அப்பாவி போல் நின்று கொண்டு, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
நாகராஜ்மீது ஏற்கெனவே வழிப்பறி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

