சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீண்டும் மக்களைச் சந்திக்கவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் தவெகவின் உள்ளரங்குக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2,000 பேருக்கு நுழைவுச் சீட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மட்டும் அக்கூட்டத்தில் அனுமதிக்கப்படுவர். கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தவெக தலைவர் விஜய், கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அந்த அசம்பாவிதத்தை அடுத்து, விஜய்யின் பிரசாரச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொண்டர் படையினரும் மக்கள் பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக அந்தக் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும் தடுப்புவேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக தவெக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் சேலம் மாநகரக் காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். டிசம்பர் 4ஆம் தேதி கார்த்திகை தீபம் என்பதால், தவெக பிரசாரத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

