சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தவெக முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்து வந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென அப்பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தவெக தலைமையில்தான் தேர்தல் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.
அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் 12,500 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அக்கட்சி தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர், திடீரென அப்பொறுப்பில் இருந்து விலகியதாகத் தெரிகிறது.
தவெக இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவில் விஜய்யுடன் சேர்ந்து மேடையேறிய பிரசாந்த் கிஷோர், விஜய்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என அக்கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசினார்.
தவெகவின் அரசியல் பாதையை வகுக்க தனி ஆலோசனைக் குழுவையும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள துணைக் குழுக்களையும் அமைத்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார் பிரசாந்த் கிஷோர்.
இந்நிலையில், அவருக்கு தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் இதனால் பிரசாந்த் கிஷோர் கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், தனது ஆலோசனைப் பணிக்கு பிரசாந்த் கிஷோர் கேட்ட பெருந்தொகையால் தவெக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
இதனால் பிரசாந்த் கிஷோர், தவெகவின் நடவடிக்கைகளில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருப்பதாகவும் அவர் சில காலம் ஓய்வு எடுக்கப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
“நவம்பர் மாதத்திற்குப் பிறகு விஜய்யின் சிறப்பு ஆலோசகராகச் செயல்படுவது குறித்து முடிவெடுக்க உள்ளேன். அதுவரை பீகார் மாநிலத் தேர்தலில் கவனம் செலுத்துவேன்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.