சென்னை: அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், ஜூலை 31ஆம் தேதி மாலை இரண்டாம் முறையாக தமிழக முதல்வர் ஸ்டாலினை அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் களத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.
“எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. நான் ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகாலம் அவரது நேரடிப் பார்வையில் பணியாற்றி இருக்கிறேன்.
“அரசியல், கட்சி ரீதியாக எனக்கு அனைத்தும் தெரியும். தமிழகத்துக்கு உரிய நிதியைக் கொடுக்காத பாஜக மீது வருத்தம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்குச் செய்ய வேண்டியதை செய்யத் தவறும்போது அதைக் கண்டறிந்து தினமும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறேன்,” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
இதற்கிடையே, தன்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
“நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி,” என்று பிரேமலதா உடனான சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், மற்றொரு பதிவில், “உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி,” என்று ஓபிஎஸ் உடனான சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தவெகவுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் விரும்பியதாகவும் அவருக்கு தவெக அவைத் தலைவர் பதவியை அளிக்க அக்கட்சித் தலைவர் விஜய் முன்வந்ததாகவும் ஓர் தகவல் வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், இதுகுறித்து இருதரப்பில் இருந்தும் பின்னர் வேறு தகவல்கள் வெளியாகவில்லை.

