சென்னை: புதிய விதிமுறைகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்படும் வரை, தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்குக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அத்துடன்பொதுக்கூட்டங்கள், சாலைக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரும் வழக்கை விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் ஆணையிட்டது.
அதன் அடிப்படையில், இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை (அக்டோபர் 27) விசாரித்தது.
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது. நெறிமுறைகளை வகுக்க மாநில அரசு தவறினால் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

