வரதட்சணை வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் சட்டப்படி குற்றம்.
ஆனால், சமூக வழக்கப்படி வாங்குவதும் குற்றமில்லை, கொடுப்பதும் குற்றமில்லை எனும் மனோபாவம்தான் பரவலாக இருக்கிறது.
கணவர் வீட்டாரின் வரதட்சணை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல்தான் திருப்பூர் ரிதன்யா போன்ற பெண்கள் தன்னுயிரை இன்னுயிர் என உணராமல் மாய்த்துக் கொள்கிறார்கள்.
இந்தியா வந்த கிரேக்க வரலாற்று ஆசிரியரான மெகஸ்தனிஸ் ‘வரதட்சணை வாங்காத’ இந்தியச் சமூகத்தைப் பற்றி குறிப்பெழுதியிருக்கிறார்.
பெண்ணின் புற அழகையும் உள்(ள) அழகையும் பார்த்து ஆண்களும் ஆண்களின் வீரத்தையும் கருணையையும் கண்டுதான் பெண்களும் காதல் வயப்படுகிறார்கள். இத்தகைய தட்சணையற்ற காதல்தான் சங்க காலத்தில் ‘களவொழுக்கம்’ எனப்பட்டது.
களவு என்பது களவாடுதலைக் குறித்தாலும், அதை மிக ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும் என்பதால் ‘களவொழுக்கம்’ என்றனர். இன்றைய காலத்தில் காதல் திருமணமே வரதட்சணைக் கொடுமை ஒழிய வழி.
காதலிக்காத தலைவன், தான் மணக்கவிருக்கும் தலைவியின் குடும்பத்திற்கு நிலத்தையும் பொன்னையும் பொருளையும் தரும் வழக்கமும் இருந்திருக்கிறது அன்றைய தமிழ்ச் சமூகத்தில்.
ஆனால், இன்று ‘வெட்டி ஆபீசர்’ மாப்பிள்ளைக்குக்கூட பெண் வீட்டார் நகை, பணம், பொருள் என ‘அழ’ வேண்டியுள்ளது. இத்தனையும் கொடுத்துவிட்டு, ‘என் மகளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என ‘தொழ’வும் வேண்டியுள்ளது. அந்த அளவு வாழக்கையே ஒரு வர்த்தகமாகிவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau) 2021ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 13,534 வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1961ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரதட்சணை தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டபோதும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.
வரதட்சணையால் உண்டாக்கப்படும் உயிரிழப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை இந்தியத் தலைநகர் டெல்லியில்தான் மிக அதிகம்.
தேசிய குற்ற ஆவணக் கூற்றின்படி,
1. 2022ல் மொத்த வரதட்சணை வழக்குகள் 6,450.
2. வரதட்சணை கொடுமையால் இந்தியாவில் நாளொன்றுக்கு 20 பெண்களுக்கு மரணம் ஏற்படுகிறது, ஏற்படுத்தப்படுகிறது.
3. உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வரதட்சணைப் பிரச்சினையில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.
தேசிய பெண்கள் ஆணையம் டெல்லி, கான்பூர், பெங்களூரு, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்களில் வரதட்சணைக் கொடுமை அதிகம் உள்ளதாகக் கூறுகிறது.
என்னதான் பிரசாரமும் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டாலும்கூட, நாளுக்கு நாள் வரதட்சணைக் கொடுமை வளர்ந்துகொண்டே இருக்கிறது.
வரதட்சணை மூலம் கிடைக்கும் பொன், பொருள்களைத் தங்கள் சுற்றத்தாரிடம் சொல்லிப் பெருமைப்படுகிறார்கள். வரதட்சணை இப்போது ஒரு கௌரவப் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதே பல்வேறு விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அண்மையில், தமிழகத்தையே உலுக்கியது திருப்பூர் ரிதன்யா வரதட்சணை விவகாரம். அந்த இளம்பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்டது இன்னமும் நீங்காத அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரிதன்யாவுக்கு போட்ட இடுப்பு ஒட்டியானம் மட்டுமே 50 பவுன் தங்கம் எனக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 300 பவுன் தங்கம் வரை வரதட்சணையாக கொடுத்தும்கூட, நிறைமனம் இல்லாத மாமியாரால் இந்த விபரீதம் நேர்ந்திருக்கிறது என்கிறார்கள்.
அதுமட்டுமில்லை. ஒற்றைப் பிள்ளையாய்ப் பிறந்து, வெளிப்பழக்கம் இல்லாமல் வளர்ந்த ஒருவரின் (ரிதன்யாவை மணந்தவன்) முறையற்ற பாலியலும் மன உளைச்சலை ரிதன்யாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவே இந்தத் துயர முடிவு!
ரிதன்யா நான்கு மாதங்களேயான தன் திருமணப்பந்தம் தீப்பந்தமானதால், தன் தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ் அப் ஒலிப்பதிவில், ஒருவனுக்கு ஒருத்தி என்பதால் உயிரை மாய்ப்பதாகச் சொல்ல, இது தன் மகளின் கற்பு நெறி என ரிதன்யாவின் தந்தை நினைக்கிறார்.
“பிரச்சினைகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், உயிர் ஒன்றே ஒன்று.
பேருந்தைத் தவறவிட்டால் தொடர்வண்டியில் பயணம் செய்யலாமே தவிர, பயணம் முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது.
புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்ப வேண்டும். ஏனென்றால் வாழ்க்கை என்பதே நம்பிக்கைதானே.
பயண வாகனம் பலவேறாக இருந்தாலும், பயண இலக்கை அடையும் முயற்சி இருக்க வேண்டும்,” என்பதே இத்தகைய பிரச்சினைகளைக் கையாளும் மனோதத்துவ நிபுணர்களின் கூற்று.
இந்த உலகின் மிக மதிப்பு மிக்கது உயிர் ஆற்றல் ஒன்றே.
நீங்கள் வாழப்பிறந்தவர் மட்டுமல்ல... ஆளப் பிறந்தவராகவும் இருக்கலாம்!
ரூ.21 கோடிக்கு சீர்வரிசைப் பொருள்களை
ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகள் குடும்பத்தினரால் மணமகனுக்கு பெட்டிப் பெட்டியாக வரதட்சணை வழங்கப்பட்டது.
குண்டூசி முதல் ஏசி வரை சீர்வரிசைகளும், ஒரு கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி, நிலங்கள், ரூ.1.5 கோடி ரொக்கம் மட்டுமின்றி பெட்ரோல் நிலையமும் சீராக கொடுக்கப்பட்டது.
வட இந்தியாவில் மார்வாரி மற்றும் ஜாட் கலாசாரத்தில் திருமணச் சடங்கின்போது பரிசுகள் வழங்குவது இயல்புதான் என்றாலும் வரதட்சணையாக ரூ.21 கோடி மதிப்பிலான பொருள்களை வாரிக் கொடுத்துள்ளனர். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

