பரந்தூர்: சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமையவிருக்கிறது.
அத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுர மாவட்டத்தில் இருக்கும் பரந்தூரிலும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களிலும் இருந்து மொத்தமாக 5,746 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.
ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்கள் அத்திட்டத்துக்கு எதிராக தொடா்ந்து போராட்டம் நடத்தி வந்தாலும், விமான நிலையம் அமைப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.
கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக தொகைத் தருவதற்கு அரசு முன்வந்த நிலையில், நிலத்தின் விலை நிா்ணயம் தொடா்பாகத் தமிழகத் தொழில் நிறுவன, முதலீட்டுத் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பரந்துரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக 3,774.01 ஏக்கா் தனியாா் பட்டா நிலங்களும் 1,972.17 ஏக்கா் அரசு நிலங்களும் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டதாகவும் தனியாா் நிலங்களுக்கான விலையை நிா்ணயம் செய்வது தொடா்பாக மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பேச்சுவாா்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் குழுக்களின் பரிந்துரைப்படி, வழிகாட்டி மதிப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை உள்ள நிலங்களுக்கு இழப்பீடு, ஊக்கத் தொகையுடன் சோ்த்து ரூ.35 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை அனைத்து உள்ளடக்கத்துடன் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட 374.53 ஏக்கா் நிலத்துக்கு மட்டும் குறைந்தபட்ச தொகை ஏக்கருக்கு ரூ.40 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.60 லட்சம்வரை வழங்கலாம் என்றும் வழிகாட்டி மதிப்பு ரூ.17 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள 996 ஏக்கா் பரப்பு நிலங்களுக்கு ரூ.2.51 கோடி வரை ஏக்கருக்கு விலை நிா்ணயம் செய்யப்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை நிா்ணயத்தை நில உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், அவா்களது நிலங்களையும் அதன் அமைப்புகளையும் உரிய துறைகளின் வாயிலாக மதிப்பீடு செய்து அவா்களுக்கும் 100 விழுக்காடு இழப்பீடு, 25 விழுக்காடு ஊக்கத் தொகை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.