தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவெக செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதிக்க வாய்ப்பு

2 mins read
32141b81-fcc9-4c3a-aaf5-81800028c421
செயற்குழு கூட்டத்தில், முதற்கட்டமாக, கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துகளை விஜய் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம், அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் வரும் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகேயுள்ள பனையூரில், கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வழி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் இரு பெருங் கூட்டணிகள் அமைவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், தவெக இவற்றுள் ஏதேனும் ஓர் அணியில் இணையுமா அல்லது தனித்துக் களம் காணுமா என்பது தெரியவில்லை.

இல்லையெனில், அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவதையே கொள்கையாகக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் கைகோக்குமா என்பது குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் கழகத் தலைவரின் நிகழ்வுகள், தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது என பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.

செயற்குழு கூட்டத்தில், முதற்கட்டமாக, கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துகளை விஜய் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது.

மேலும், கூட்டத்தில் உரையாற்றும் பட்சத்தில், அவர் கூட்டணி குறித்து சூசகமாக ஏதேனும் தகவலைக் குறிப்பிடும் வாய்ப்பு உள்ளதாகவும் தவெகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்