தமிழக - கர்நாடகா எல்லையில் ஆம்னி பேருந்துச் சேவை முடக்கம்: நள்ளிரவில் பயணிகள் அவதி

1 mins read
9e408ad0-c9f2-4e29-80ea-8d64fb2290c1
நள்ளிரவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். - படம்: இந்திய ஊடகம்

தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு, உரிய அனுமதி, பாதுகாப்புச் சான்றிதழ் இல்லை என்று கூறி கர்நாடகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சுமார் 60 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும், ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ விதிகளின்படி கூடுதல் சாலை வரியும் விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்தது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இருந்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய ஆம்னி பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள் பேருந்திலிருந்து இறக்கப்பட்டு, வேறு வாகனங்களில் கர்நாடகாவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான பயணிகள், அதிகாலையிலேயே சுமார் 1 கி.மீ. தூரம் தங்கள் சுமைகளுடன் நடந்து சென்று, பெங்களூரு பேருந்துகளில் ஏறிச் செல்ல நேரிட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ, வாடகைக் கார் ஓட்டுநர்கள் சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பயணிகள் மேலும் சிரமத்துக்கு ஆளாகினர்.

குறிப்புச் சொற்கள்