லண்டன்: மற்ற இந்திய மாநிலங்கள் வியந்து பார்க்கக்கூடிய மாநிலமாக உயர்ந்து இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாகத் தமிழகம் விளங்குவதாகவும் லண்டனில் நடந்த விழாவில் அவர் குறிப்பிட்டார்.
இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை என்றும் தமிழகம் வளமான மாநிலமாக வளர்ந்து வருகிறது என்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அரங்கத்தில் பேசுவதைத் தாம் பெருமையாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
“தமிழக முதல்வர், தெற்காசியாவில் அரசியலைப் புரட்டி போட்ட இயக்கமான திமுக இயக்கத்தின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல, ஈவெராவின் பேரன் என்கிற கம்பீரத்துடன் உங்கள் முன் வந்து இருக்கிறேன்,” என்று திரு ஸ்டாலின் கூறினார்.
இந்த ஐரோப்பிய பயணத்தின்போது ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி வந்து, ஏராளமான பேர் இங்கு நல்ல நிலையில் இருப்பதைக் காண முடிந்ததாகத் தெரிவித்த அவர் கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் முன்னேறி உள்ளது என்றார்.
“பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் லண்டனில் உயர்ந்த நிலையில் வாழ்கின்றனர். இது சமூக நீதியின் வெற்றி,” என்று ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.

