சென்னை: பகுஜன் சமாஜ், தவெகவின் கொடிகளில் எந்த ஒற்றுமையும் இல்லை என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
பகுஜன் சமாஜ், தவெக ஆகிய இரு கட்சிகளின் கொடிகளிலும் யானை சின்னம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் சார்பில் அதன் தமிழக பொதுச் செயலாளர் வழக்கு தொடுத்துள்ளார்.
இதையடுத்து, இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி தவெக பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கொடியில் இருப்பது ஒற்றை யானை என்றும் தவெக கொடியில் இருப்பது இரட்டை யானைகள் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதால் வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் குழப்பம் ஏற்படாது என ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தவெகவின் கொள்கை, கோட்பாடு தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல, தமிழகத்தின் கலாசாரப் பெருமை, வரலாற்றுப் பெருமை, சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பகுஜன் சமாஜ் கட்சியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்று புஸ்ஸி ஆனந்த் தமது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

