சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் பிரமுகர்களுக்கு அக்கட்சியின் மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இது தொடர்பான விவாதங்கள் மேலும் தொடர்ந்தால் அது திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணிக்குப் பாதகமாக அமையும் என்றும் மேலிடம் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து தமிழக காங்கிரசார் தெரிவித்து வரும் கருத்துகள் திமுக தலைமைக்கு அதிருப்தி அளித்திருப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வருகிறது. எனினும் தற்போது திமுக ஆட்சிக்கு எதிரான கருத்து நிலவுவதால், அதனுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயங்குவதாக தகவல் வெளியானது.
எனவே எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கருதப்பட்டது. இதற்கேற்ப திமுகவிடம், அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் வலியுறுத்தும் என அக்கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
ஆனால் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினோ, “திமுக-காங்கிரஸ் கூட்டணி இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்,” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கரூர் சம்பவத்திற்கு பிறகு ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்த பிறகு தவெக, காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுகள் மேலும் விவாதங்களை கிளப்பியது.
எனினும் பல்வேறு ஆரூடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் ராகுல் காந்தியும் உறுதிபடக் கூறிவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அண்மையில் தனியார் புத்தக விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், விரைவில் டெல்லியில் இருந்து இண்டியா கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வரும் என்றார்.
“திமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம். தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறோம். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் திமுக கூட்டணியுடன் தொடர்வதுதான் நல்லது. அப்போதுதான் நமக்கு வெற்றியும் கிட்டும்,” என்று இரு தலைவர்களும் அறிவுறுத்தி இருப்பதாக செல்வப் பெருந்தகை குறிப்பிட்டார்.
திமுக கூட்டணி நீடிக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை கலந்து கொண்ட விழாவில் துணை முதல்வர் உதயநிதியும் பங்கேற்றார் என்பது கவனிக்கத்தக்கது.

