சென்னை: நாகாலாந்து ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) காலமானார் இல.கணேசன். அவருக்கு 80 வயது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இல.கணேசனுக்கு கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வீடுதிரும்பினார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி காலில் மரமரப்பு ஏற்பட்டதை அடுத்து, வீட்டில் மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தார் மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். 8ஆம் தேதி அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அதில், தலையில் ரத்தக்கட்டு இருப்பது தெரிய வந்ததால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1945ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி பிறந்தவர் இல.கணேசன். ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது தீவிர பற்று கொண்டவர்.
தாம் பார்த்து வந்த அரசுப்பணியை விட்டுவிட்டு, அந்த அமைப்பின் முழுநேர ஊழியரானார். அதனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.
பிரதமர் மோடியும் இல.கணேசனும் ஒரே காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். இருவரும் பல தருணங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். கட்சியின் மண்டலப் பொறுப்பாளர்களாக இருந்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு, நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார் இல.கணேசன்.
இல.கணேசனின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இல.கணேசன் நீண்ட பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


