சென்னை: உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் ஒன்றை அமைக்க தமிழக அரசு 301 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
சென்னைக்கு அருகே உள்ள செம்மஞ்சேரி பகுதியில் இந்த விளையாட்டு நகரம் அமைக்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தென்னிந்தியாவில் முதல் முறையாக உருவாகும் மிகப்பெரிய விளையாட்டு நகரமாக அமையும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. எனினும், இப்போதுதான் அது செயல்வடிவம் பெறுகிறது.
புதிய விளையாட்டு நகரம் 112.12 ஏக்கரில் அமையும் என்றும் இதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முதற்கட்டமாக, தமிழக அரசு 30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக ஊடகச் செய்தி கூறுகிறது.
புதிய விளையாட்டு நகரில் காற்பந்து, தடகளத் திடல்கள், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தைக்கான பல்நோக்கு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், நவீன செயற்கை இழை ஓடுதளம், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டு வசதிகள், பல்வேறு உள்அரங்குகளும் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வீரர்களுக்கான தங்குவிடுதிகள், புல்வெளிகள், சாலைகள், மழைநீர் வடிகால் ஆகிய ஏற்பாடுகளும் உலகத் தரத்தில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 13 மீட்டர் அகலம், ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட படகு சவாரி வசதியும் இங்கு இருக்கும். இந்தியாவின் வேறு எந்த விளையாட்டு வளாகத்திலும் இத்தகைய நீர்விளையாட்டு அமைப்பு இல்லை.
“வெள்ள நீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு அனுப்பும் வகையில் 4.1 கிலோமீட்டர் நீள மண் வடிகால் மற்றும் கான்க்ரீட் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன,” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மூன்று மாதங்களில் இத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கும் என்றும் விளையாட்டு நகரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

