சென்னை: தொலைதூரப் பகுதிகளில் வசிப்போர் எளிதாகக் கடப்பிதழைப் பெறுவதற்கு சென்னையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கடப்பிதழ் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடமாடும் வேன் சேவையை மத்திய வெளியுறவு அமைச்சு சென்னையில் தொடங்கி உள்ளது.
நகர்ப்புறங்களுக்கு வெளியே தொலைதூரத்திலும் கிராமப் புறங்களிலும் வசிப்போரின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக வேனில் கடப்பிதழ் சேவைகளுக்கான வசதிகள் உள்ளன.
மத்திய வெளியுறவுத்துறையின்கீழ் செயல்படும் கடப்பிதழ் சேவைத் திட்டத்தின் இணைச் செயலாளரும், தலைமை கடப்பிதழ் அதிகாரியுமான கே.ஜெ. ஸ்ரீனிவாசா, வேன் சேவையைத் தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு, சென்னை மண்டல கடப்பிதழ் அலுவலக அதிகாரி எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார்.
தற்போதுள்ள கடப்பிதழ் சேவை மையங்கள் மற்றும் அஞ்சல் அலுவலக கடப்பிதழ் சேவை மையங்கள் தவிர, கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலில் கடப்பிதழ் சேவைகளை வழங்குவதே இந்த வேன் சேவையின் நோக்கம் என்று கடப்பிதழ் சேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வேனில் சேவை வழங்கப்படுவதால், கடப்பிதழ் சேவைகளைப் பெற மக்கள் இனி நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை.
இந்த வேன் முதலில் தாம்பரத்தில் நிறுத்தப்படும். பின்னர், கடப்பிதழ் பெறுவதற்கான காலவரம்புகள் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்லும்.
தொடர்புடைய செய்திகள்
‘பாஸ்போர்ட் சேவா’ இணைய வாசம் மூலம் கடப்பிதழ் சேவைகளைப் பெற இணையத்தில் பதிவு செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.