சேலம்: ஏறக்குறைய 68 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை ஜூன் மாதத்திலேயே நிரம்பி உள்ளது.
இதனால் பாசனத்துக்காக மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதையடுத்து, காவிரிக் கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து, அதிலிருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து கர்நாடகாவில் உள்ள அணைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன.
இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
68 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்திலேயே மேட்டூர் அணை இவ்வாறு முழுக் கொள்ளளவை எட்டுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கேரளாவிலும் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். கடந்த இரு நாள்களில் நீர்வரத்தான 60,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக அதிகரித்தது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 118 அடியை எட்டிப்பிடித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
மேலும், உடனடியாக 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி கரையோரம் வசித்து வரும் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் மேடான பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை, தனது முழு கொள்ளளவை எட்டுவது இது 44வது முறையாகும்.