தூத்துக்குடி: திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்விபத்து சனிக்கிழமை (நவம்பர் 15) நேர்ந்தது.
அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. முருகானந்தபுரம் பகுதியில் சென்றபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாகக் கவிழ்ந்தது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்குக் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காகச் சாலையின் இடப்புறமாகப் பேருந்தைத் திருப்பியபோது, அதன் சக்கரம் மண்ணில் புதைந்து விபத்து நேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

