சென்னை: வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் அந்நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 49 கட்சிகள் கலந்துகொண்டன. தமாகா, அமமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன.
நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடங்க இருக்கிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சியை பாஜக மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.
வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிரான தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் இந்நேரத்தில் வாக்காளர் திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை என்பதால்தான் எதிர்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவசியம் என்றாலும், அந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் தேர்தல் ஆணையம் அவசரம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள், ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால், வழக்கு தொடுக்க முடிவு செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

