சென்னை: இந்தியப் பொருள்களுக்கு 50% வரி வதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார். அதையடுத்து திருப்பூரின் பின்னலாடைத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி பின்னலாடை ஏற்றுமதி முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, அமெரிக்காவுக்கு மட்டும் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 30% முதல் 35% வரையிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 8 பில்லியன் டாலர்கள், அதாவது 26.8% பங்களித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரி தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத்துறையை கடுமையாகப் பாதிக்கும். எனவே ஏற்றுமதியாளர்களுக்குச் சிறப்பு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன், “திருப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 60% பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் திருப்பூரின் ஏற்றுமதி ரூ.45,000 கோடி மதிப்புடையதாக இருந்தது.
“அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் ரூ.12,000 கோடி மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு தகுந்த நிதி உதவி வழங்கவேண்டும்,” என்று கோரிக்கை வைத்துள்ளார்.