தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜவ்வாது மலை சிவன் கோயில் புனரமைப்பு: கருவறையில் கண்டெடுக்கப்பட்ட 103 தங்க நாணயங்கள்

2 mins read
bb66876e-0dd6-461e-96d3-ba171614383f
திருமூலநாதர் கருவறையில் கண்டெடுக்கப்பட்ட பானைக்குள் இருந்த 103 தங்க நாணயங்கள். - படம்: இந்து தமிழ் திசை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை வட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒரு பழமையான ஆதி சிவன் கோயில் அமைந்துள்ளது.

காலப்போக்கில் இந்தக் கோயிலின் கருவறை, திருமூலநாதர் சந்நிதி, ராஜகோபுரம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ரூ.2.49 கோடி மதிப்பீட்டில் கோயிலைப் புனரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பானையில் புதையல்

இந்நிலையில், திங்கட்கிழமை (நவம்பர் 3) காலை ஊழியர்கள் திருமூலநாதர் கருவறையில் கட்டுமானப் பணிகளுக்காகப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தரைக்குக் கீழே ஒரு சிறிய பானை புதைந்திருப்பதைக் கண்டனர்.

சந்தேகத்துடன் அந்தப் பானையை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தபோது, அதனுள் தங்க நாணயங்கள் இருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில், உதவி ஆணையர் சண்முகசுந்தரம், செயல் அலுவலர் சிலம்பரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்தப் பானையில் மொத்தம் 103 தங்க நாணயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட அந்த 103 தங்க நாணயங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்தும் இவற்றின் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்