கொழும்பு: எக்காரணத்தை முன்னிட்டும் கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை என இலங்கை அதிபர் அனுர குமார திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைய சில நாள்களாக தமிழக அரசியல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.
நடிகர் விஜய், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதைத் தடுக்க, கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத்தீர்வாக அமையும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத் “தமிழகத்தில் தேர்தல் காலங்களில், கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவது தமிழக அரசியல்வாதிகளின் வழக்கம் என்றும் அவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திடீரென இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணம் சென்றார்.
அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செப்டம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணியளவில் திடீரென கச்சத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேல், கச்சத்தீவுப் பகுதியைச் சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
மேலும், இலங்கை மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை தாம் நிறைவேற்றுவது உறுதி என்றும் இவ்விஷயத்தில் எத்தரப்புக்கும் தாம் அடிபணியப் போவதில்லை என்றும் இலங்கை அதிபர் கூறியதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டு்ளது.
இலங்கை அதிபர் ஒருவர் கச்சத்தீவுக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய மீனவர்கள் விஷயத்தில் அதிரடியாக ஒரு முடிவெடுக்கப் போவதாகக் குறிப்பிட்ட அதிபர், இனி, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்து இலங்கைக் கடற்படையிடம் சிக்கினால், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை அவ்வளவு எளிதாக விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
இதுவரை பறிமுதல் செய்யப்படும் இந்திய மீனவர்களின் படகுகளை மனிதாபிமான அடிப்படையில் திரும்ப ஒப்படைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இனி அதுபோல் நடக்காது என்றும் தெரிவித்தார்.

