புதுடெல்லி: சீன குடிமக்களுக்கு மீண்டும் ஐந்து ஆண்டுகள் சுற்றுலா விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டமாக அந்நாட்டில் உள்ள இந்தியத் துாதரகங்களில் மட்டும் இச்சேவை துவங்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் வசிக்கும் சீனர்கள் தற்போது இச்சேவையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில், இருதரப்பு ராணுவத்துக்கு இடையே திடீர் மோதல் மூண்டது. அப்போது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதையடுத்து இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன. சீனாவுக்கான விமானப் போக்குவரத்து நின்று போனது. சீனர்களுக்கான சுற்றுலா விசாவை இந்திய அரசு நிறுத்தியது.
கொரோனா தொற்றுப் பரவலும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டின்போது பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர்.
இதன் எதிரொலியாக எல்லையிலிருந்து இருதரப்பு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. மேலும், இந்தியா-சீனா இடையே விமானச் சேவையும் சீரானது.
தற்போது சீன மக்கள், இந்தியாவுக்குச் சுற்றுலா செல்ல ஏதுவாக சுற்றுலா விசா வழங்கும் சேவையும் கடந்த ஜூலை 24ஆம் தேதி துவங்கியது.
தொடக்கத்தில் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் மட்டுமே சீனர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் விசா சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலகெங்கும் உள்ள சீன குடிமக்கள், அருகே உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் சுற்றுலா விசா பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

